** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 11 December 2014

ஒரு மார்வாடி எப்படி செல்வந்தனாகிறான்???
பிர்லா, கோயங்கா, மித்தல், கன்ஷியாம்தாஸ், ஓஸ்வால், சிங்கானியா, சேத், டால்மியா, பஜாஜ், பொத்தார், பிரமல், ஜுன்ஜுன்வாலா என பல பெயர்களில் உள்ள மார்வாடிகளின் ஆதிக்கத்தில் தான் இந்திய வணிகம் முழுவதும் உள்ளது எனச் சொல்லலாம்.
மார்வார் எனும் கிழக்கு ராஜஸ்தான் பகுதியிலிருந்து வந்தவர்கள் மார்வாரிகள். இவர்கள்தான் மார்வாடிகள் என அழைக்கப்படுகின்றனர். வறண்ட பாலைவனப் பகுதியானதால் வளங்களை சிக்கனமாகத் சேமித்து வாழத்தெரிந்த சமூகம் அது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல பஞ்சாப், உத்தரப் பிரதேசம், வங்காளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா என பரந்து விரிந்து, முதலாம் உலகப்போரின்போது கிட்டத்தட்ட வட இந்தியா முழுவதும் வணிக உலகில் விஸ்வரூபம் எடுத்தவர்கள் மார்வாடிகள்.
நம் இலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் கொடூர வில்லன்கள் அல்லது காமெடியன்களாகத் தான் சேட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இன்னமும் இவர்களை “நம்பள் நாளே வரான். பைசா கேக்கறான். நிம்பள் கொடுக்கிறான்” என்று பேசுவதாகத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உழைக்காமல் ஏழைகளிடம் வட்டிக்காசு வசூலித்து, அவர்கள் ரத்தத்தை உறிஞ்சி வாழ்பவர்கள் என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் மிகுந்த வறியவனாய், வந்தேறியாய் வரும் ஒரு மார்வாடி எப்படி செல்வந்தனாகிறான் என்பது யாரும் அறியாத கதை.
அதை விரிவாக அறியும் வாய்ப்பு வந்தது- The Marwaris- from Jagat Seth to the Birlas என்ற நூல் மூலமாக, மார்வாரிகள் பற்றி 50 ஆண்டுகளாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர் தாமஸ் டிம்பெர்க்.
குரு சரண்தாஸ் எழுதிய முன்னுரையே முப்பது பக்கங்கள் என்றாலும் அது ஒரு பிரமாதமான ட்ரெயிலர் என்று சொல்லலாம். 1971-ல் மார்வாடிகளின் வணிக எழுச்சி பற்றி பிஹெச்.டி. ஆய்வாளரான டிம்பெர்க்கை சந்திக்கிறார் குரு சரண்தாஸ். இந்தியாவின் உள் நாட்டு வணிகம் முழுவதையும் மார்வாடிகள் எப்படி தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள் என்று அறிகிறார்.
ஒரு புதிய பொருளை மிக விரைவில் அது பற்றி தெரிந்து கொண்டு அதை வாங்கி, விற்று வணிகம் நடத்தும் இவர்களுக்கு ரிஸ்க் எடுப்பது நிஜமாகவே ரஸ்க் தின்பது போலதான் எனத் தோன்றுகிறது. தந்தி வராத காலத்தில் புறாக்களை வைத்தும், தந்திகளை முதலில் பயன்படுத்தியும், திருட்டுத்தனமாக ரேடியோ கருவிகளை வைத்துக் கொண்டும், லண்டன் பங்குச் சந்தை விலை முதல் உள்ளூர் விலை வரை எல்லாவற்றையும் எப்படி வேகமாக அறியத் துடித்தார்கள் என்று படித்தபோது வியப்பாக இருந்தது.
சேத்தின் வியாபார நிர்வாக வழிமுறைகள் அலாதியானவை. ‘கடி’ என்ற பஞ்சு மெத்தைதான் சேத்தின் அலுவலகம். முனிம் என்கிற கணக்கர்தான் கணக்குகள் எழுதுவார். உள் அறையில் சரக்குகள் இருக்கும். பின் கட்டில் பிராமணர்கள் சமைப்பார்கள்.
புதிதாக வரும் மார்வாடி இளைஞர்களுக்கு அங்கேயே தங்கி, வேலை செய்யும் வசதி செய்து தரப்படுகிறது. முதலில் ஹுண்டி எனும் கணக்கியல் பயிற்சி. பின் சரக்கு பரிமாற்றம். பிறகு ஏதாவது ஒரு கிளையில் வேலை. தனியாக தொழில் செய்ய நினைத்தால் நிதிதாரராக அல்லது பங்குதாரராக சேத்தே உதவி செய்வார்.
முதலாளியின் உள்ளுணர்வு எல்லா முடிவுகளுக்கும் காரணி. நம்பிக்கைதான் வியாபார மந்திரம். கூடி வாழ்தல்தான் பிழைக்கும் வழி என எத்தகைய போட்டி என்றாலும் கூடியே வாழ்தல். எல்லா கணக்கும் அன்றன்றே பைசல் செய்தல். போட்டியாளர், பகையாளி என யாராக இருந்தாலும் கடன் கொடுத்தும் வாங்கியும் தொழில் நடத்துதல் என பிரம்மிக்க வைக்கும் வழிமுறைகள்.
இவர்கள் பிரிட்டிஷ்காரர்களுக்கும் கடன் வழங்கியிருக்கிறார்கள். விடுதலைப் போராட்டத்துக்கும் நிதி வழங்கி யிருக்கிறார்கள். தொழிலில் வரிகள் நெருக்கடி, வெள்ளையரின் சூழ்ச்சி என வரும்போதெல்லாம் பணத்தை நிலத்தில் போட்டு நிலச்சுவான்தார்கள் ஆனார்கள். எந்த புதிய தொழில் வந்தாலும் ஒரு கை பார்த்தார்கள். பிட்ஸ் பிலானி, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் என அமைத்து கல்வி அமைப்பிலும் கால் பதித்தார்கள்.
அதிக அளவில் ஜெயின் வம்சம் என்றாலும் இந்து மதத்தின் நீரோட்டத்தில் கலந்தார்கள். மார்வாரி மொழியைக் காட்டிலும் இந்தியை வளர்த்தார்கள். இந்தி-இந்து-இந்தியா என்ற கட்டமைப்பில் மார்வாடிகளின் வணிக நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. பிற்காலத்தில் கலப்பு மணம் புரிந்தாலும் கவனமாய் செல்வம் காத்தார்கள். பெண்கள் மெல்ல படிக்க ஆரம்பித்தார்கள்.
கீதா பிரமல் போன்றவர்கள் பிஸினஸ் குடும்பத்தில் பிறந்து பிஹெச்.டி. செய்தார்கள். ராம் மனோஹர் லோஹியா, கமல்நாத் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தார்கள். லாலு பிரசாத் யாதவின் உலகப் பிரசித்தி பெற்ற ரயில்வே துறை பட்ஜெட்டை தயாரிக்க உதவிய ஐ.ஏ.எஸ். அதிகாரி கூட மார்வாடிதான் என்று அறிகையில் அந்த சமூகத்தின் வீச்சு புரிகிறது. புத்தகம் நிறைய எல்லா சேட்டுகளின் பெயர்களும் சொந்தங்களும் அவர்களின் தொழில்களின் வரலாறுகளும் திகட்டத் திகட்டக் கொடுக்கப்படுகின்றன.
உலகமயமாக்கலை தடுக்கும் ராகுல் பஜாஜ் முயற்சிகளும், உலக மயமாக்கத்துக்குப் பிறகு நிர்வாக முறைகளை மாற்றிய குமாரமங்கலம் பிர்லாவின் முயற்சிகளும் அந்த சமூகத்தின் வளைந்து கொடுக்கும் தன்மையை எடுத்துக் காட்டுகிறது.
தற்போது போப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்திய பில்லியனர்களில் நான்கில் ஒரு பங்கு மார்வாடிகள் இருக்கிறார்கள். இவர்கள் இல்லாத தொழில்கள் இல்லை எனச் சொல்லலாம். ஏழாவது தலைமுறை காணும் பிர்லாவை அமெரிக்காவின் போர்ட் அல்லது ராக்பெல்லருடன் ஒப்பிடலாம் என்கிறார் ஆசிரியர்.
மார்வாடியைப் போல பணக்கார வியாபாரியாக என்ன வழி என்று கேட்கையில் ஒரு மார்வாடியே இதை நகைச்சுவையாய் சொல்கிறார்: “ஒரு மார்வாடியின் மகளை கட்டிக்கொள்ளுங்கள். அவர்கள் உங்களை பணக்கார வியாபாரியாக மாற்றிக் காட்டுவார்கள்”