** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 22 May 2015

தமிழ்... வாழிய வாழியவே!--------பாண்டி........

அகரத்தை அடியாய், ழகரத்தை முடியாய்ப் பெற்ற, பொதிகை மலைத் தேன் தமிழ்... அடியாழம் காண முடியா அதிசய ஆழித் தமிழ்... உயிருக்கு மெய்யழகு என்று சொன்ன அறத்தமிழ்... முடியரசரெல்லாம் வணங்கிய முத்தமிழ்... பல மொழி கற்ற பாரதியும் வியந்து நின்ற வித்தகத் தமிழ்... ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ வென்று, விதியை வீதியில் வீசி, ஞானம் புகட்டிய பகுத்தறிவுத் தமிழ்... ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று சொன்ன கணியனின் கண்ணியத் தமிழ்... ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவனின் பொதுவுடைமைத் தமிழ்... அக்னிக் குஞ்சு பாரதிக்கு பாட்டுத் தேரோட்டிய சாரதித் தமிழ்..., சிலம்பெறிந்து பரல் தெறிக்க, மன்னவன் அவையில் கண்ணகியின் கனல் வார்த்தையில், நீதி கேட்டு ஆடித் தீர்த்த ஆவேசத் தமிழ்... விதி மறுத்த இளங்கோவுக்கு சிலம்பால் முடிசூட்டிய சிந்தனைத் தமிழ்... ஔவைக்கு இளமை தந்த நெல்லிக் கனித்தமிழ்... எழுத்திலும் ஆயுதம் தரித்து எதற்கும் தயார் என்று மார் தட்டிய மறத் தமிழ்... ஆதிப் பாறையில் செதுக்கிய தமிழ்... பனையோலையில் பதிந்த தமிழ்... காகிதம் தாண்டி, கணிப் பொறி யுகத்திலும் வாழும் தமிழ்... வாழிய வாழியவே!