** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 6 November 2014

மெட்ராஸ்–ஐ கண் நோய் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் :-நன்றி.மதன்..

மெட்ராஸ்–ஐ என்று அழைக்கப்படும் கண் நோய் வெகுவேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாரபட்சமின்றி பாதிக்கும்.
எப்போதும் கோடை காலத்தில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் மட்டுமே பரவும் மெட்ராஸ்–ஐ கண் நோய் இந்த முறை வழக்கத்துக்கு மாறாக மழைக்காலத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் ஒருவருக்கு இந்த நோய் வந்தால் உடனடியாக அனைவருக்கும் பரவும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் பொருட்களை தொட்டாலே அதன் மூலமாக இந்த நோய் பரவும் என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் எரிச்சலுடன் வலியும் அதிகமாக உள்ளது. இதனால் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகள் பெரிதும் அவதிக்குள்ளாகிறார்கள்.
அடினோ என்ற வைரஸ் மூலமாகவும், பாக்டீரியா கிருமி மூலமாகவுமே மெட்ராஸ்–ஐ கண் நோய் பரவுகிறது. இதில் 75 சதவீத நோய் பாதிப்பு வைரஸ் கிருமிகளாலேயே பரவுகிறது.
பெரும்பாலும் மெட்ராஸ்–ஐ கண் நோய் ஒரு கண்ணை மட்டுமே பாதிக்கும். ஆனால் தற்போது பரவி வரும் வைரசால் 2 கண்களுமே கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இதற்கு இந்நோயை பரப்பும் வைரஸ் கிருமியின் வீரியம் அதிகரித்திருப்பதே காரணம்.
மெட்ராஸ்–ஐயால் பாதிக்கப்பட்டவர்கள் பள்ளி, கல்லூரிகள், பணிபுரியும் அலுவலகங்கள், சினிமா தியேட்டர்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லக்கூடாது. இதனால் மற்றவர்களுக்கும் நோய் பாதிப்புகள் ஏற்படும்.
கண்களில் இருந்து நீர் வடிதல், கண்வீக்கம், கண் சிவப்பது உள்ளிட்டவையே மெட்ராஸ்–ஐயின் அறிகுறிகளாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கண் டாக்டர்களிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். முறையான சிகிச்சை பெறாவிட்டால் கருவிழி பாதிக்கப்பட்டு கண் பார்வையை இழக்கும் அபாயமும் ஏற்படலாம்.
எப்போதுமே நாம் வசிக்கும் இடத்தை சுகாதாரமாக வைத்திருந்தாலே நோய் பரப்பும் வைரஸ் கிருமிகள் உருவாவதை தவிர்க்கலாம்.
எனவே அனைவரும் வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் நமது உடலையும் சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும்.
மெட்ராஸ்–ஐ கண் நோயை பொறுத்தவரை பொதுமக்கள் மத்தியில் எப்போதுமே ஒருவித பீதி நிலவி வருகிறது.
மெட்ராஸ்–ஐயால் பாதிப்புக்குள்ளானவர்களின் கண்களை பார்க்கக்கூடாது என்றும், அப்படி பார்த்தால் மெட்ராஸ்–ஐ உடனே பரவிவிடும் என்பதுதான் அதுவாகும்.
ஆனால் டாக்டர்கள் இதனை முழுமையாக மறுக்கின்றனர்.
மெட்ராஸ்–ஐயால் பாதிக்கப்பட்டவர்களின் கண்களை பார்ப்பதால் மட்டுமே அந்நோய் பரவாது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் துணி, சோப்பு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தினால் மட்டுமே மெட்ராஸ்–ஐ பரவும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். அதே நேரத்தில் மெட்ராஸ்–ஐ கண் நோய் ஒருமுறை வந்து விட்டால் மீண்டும் உடனடியாக பாதிப்பு ஏற்படாது என்பதும் டாக்டர்களின் கருத்தாக உள்ளது.